

ஆரணியில் காஸ் அடுப்பில் வெந்நீர் வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கொசப்பாளையம் களத்துமேடு பகுதியில் வசித்தவர் நெசவுத் தொழிலாளி ராம்கி(31). இவர், காஸ் அடுப்பில் நேற்று முன் தினம் வெந்நீர் வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர், திரும்பி சென்று பார்த்தபோது, காஸ் அடுப்பு எரியவில்லை. இதனால், காஸ் அடுப்பை மீண்டும் பற்ற வைத்துள்ளார். அந்த சமயத்தில் காஸ் கசிந்து பரவி இருந்ததால், திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அவரது உடையிலும் தீ பற்றியதால் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் மீட்கப் பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.