Published : 14 Mar 2022 05:37 AM
Last Updated : 14 Mar 2022 05:37 AM

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் செல்போன் குறுஞ்செய்தி மூலம் பணம் மோசடி : ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

ஈரோடு

ஈரோட்டில் வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியின், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (56). அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர். சில நாட்களுக்கு முன்பு, இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில், தங்கள் வங்கிக் கணக்கு தொடர்ந்து செயல்பட, பான் கார்டு குறித்த தகவலை ஒரு இணைய இணைப்பில் தெரிவிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த இணைப்பை அவர் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் ஒரு ஓ.டி.பி. எண் அவரது போனுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கு மூடப்பட்டதாககுறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, தான் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்குப் பின்னர் அவரது வங்கிக் கணக்கு செயல்படத் தொடங்கியுள்ளது.

தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பைப் பார்த்தபோது, அவரது கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல், ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த சுதீர்குமார் (30) என்பவரது செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, பான் கார்டு எண் பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.39,500 எடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சுதீர்குமார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம்போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x