Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் :

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம், அனைத்து இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 அமைப்புகள் சார்பில் நாடு தழுவிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

அதன்படி, கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகளின் கிளைகள் என மொத்தமாக 900 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். புதிய தலைமுறை தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டன. இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.120 கோடி வரையிலான காசோலை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

கோரிக்கையை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜவேலு தலைமை வகித்தார். 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.மகேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பல தனியார் வங்கிகள் இழுத்து மூடப்பட்ட அனுபவங்கள் இருந்தும், பெருநிறுவனங்கள் வசம் பொதுத்துறை வங்கிகளை தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பில்லாதது மட்டுமல்ல. சாதாரண மக்கள் வங்கிக் கிளைகளுக்கு கடன் கேட்க கூட செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்” என்றார்.

இதேபோல, கோவை திருவேங்கடம் சாலையில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் டி.மனோகரன், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன், கற்பகம், மகாதேவன், ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 352 வங்கி கிளைகளும் முடங்கின.

நீலகிரி மாவட்டத்தில் 80 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. உதகை கனரா வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மண்டல துணைச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x