

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மழை, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார்.
அதன்படி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
சமீபத்தில் பெய்த பெருமழை, வெள்ளத்தால் காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நெல் உள்ளிட்ட பயிர்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 182 கிராம விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் வேளாண் அலுவலர்களை, பணி மாறுதல் செய்ய வேண்டும். தமிழகத்தை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
பின்னர், விவசாயிகள் அங்கிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தடுத்து நிறுத்திய போலீஸார், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.