Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM

மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி - சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி நடக்கிறது

கோவை

தொடரும் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரும் 20-ம் தேதி ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

தேனிரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி, நாடு முழுவதும்உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்யத் தொழில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அன்றைய தினம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை 170-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பு (ஏஐசிஏ) நேற்று வெளியிட்டது.

ஏஐசிஏ சார்பில் இணையவழியிலான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். கோவையிலிருந்து கொடிசியா, தென்னிந்திய பொறியியில் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை கிளை), டாக்ட் (கோவை கிளை), காட்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர்.

கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு கூறியதாவது:

கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் காணாமல் போய்விடும். கடந்த 3 மாதங்களாக பொருளாதாரம் மந்த நிலையை எட்டி வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்களிடம் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. மூன்று ‘ஷிப்ட்’கள் இயங்கிய தொழில் நிறுவனங்களில் தற்போது ஒரு ‘ஷிப்ட்’ முறை வந்துவிட்டது.

மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தால் ரூ.25 ஆயிரம் கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் நிறுவனங்கள் வரை பங்கேற்கவுள்ளன. நாடு முழுவதும் இருந்து அனைத்து அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x