Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு :

விழுப்புரம் ஆட்சியர் மோகன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருக்குறள் முற்றோதல் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது மாணவர்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்பதாக அமையும். அதனை கருத்தில் கொண்டு 2018 - 2019-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10 ஆயிரத் துடன், பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகின் றனர். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து, தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இதற்கு 1,330 திருக்குறட் பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண் பெயர், அதிகாரம் பெயர், குறள் எண் பெயர் போன்றவற்றை தெரிவித்தல் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள், மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் படிப்பவராக இருத்தல் வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கு பெறலாம். மேலும், கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழிற்நுட்பம் தொழிற்பயிற்சி, கல்வியியல், செவிலியர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்படும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறள் முற்றோதும் திறன் படைத்த மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 2-ம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04146- 221366 என்ற தொலை பேசி எண்ணிலும்,‘www.tamilvalarchithrurai.com’என்ற வலைதளத்திலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x