Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக தேவாலயங்களிலும், வீடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை காட்சிப்படுத்தும் வகையில், சிறிய குடில் அமைக்கின்றனர். இந்த குடிலுக்குள், குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோரின் சிறிய வடிவ பொம்மைகள் வைக்கப்படும். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை உள்ளிட்ட விலங்குகளும் இடம்பெறும். இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாட்டுத் தொழுவத்திலோ நிகழ்வது போன்று அமைக்கப்படும்.
எம்மதமும் சம்மதம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் ஆண்டுதோறும் மூங்கில் குடில்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த சக்திவேல். கோவை புலியகுளம், ரெட் ஃபீல்ட்ஸ் சாலையில் உள்ள புனித சின்ன அந்தோணியார் ஆலயத்துக்கு அருகே சாலையோரம், கழுத்தில் சிலுவை மாலை, நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டபடி மூங்கிலை கீற்றுக்களாக்கி, குடில் செய்து, வைக்கோலால் கூரை வேய்ந்துகொண்டிருந்த அவரை சந்தித்தோம்.
“நான் இந்து மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும், எல்லா சாமியும் கும்பிடுவேன். சர்ச்சுக்கும் செல்வேன், மசூதிக்கும் செல்வேன். 14 வயதிலிருந்து மூங்கிலை வைத்து கைவினைப்பொருட்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும்போது மூங்கில் குடில், கிறிஸ்துமஸ் ஸ்டார் போன்றவை செய்து விற்பனை செய்கிறேன். மற்ற நாட்களில் மூங்கில் ஏணிகள், கூடைகள், ஜன்னல் திரை, பாய் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம். இதைத்தவிர, பலகைகளால் ஆன பறவைகள் கூண்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.
உங்களுக்கு எப்படி மூங்கில் குடில் அமைப்பது அறிமுகமானது என கேட்டதற்கு, “எனது தாய்மாமாவுடன ஒருமுறை கேரளாவுக்கு சென்றேன். அப்போது. கிறிஸ்துமஸ் சீசனில் மூங்கில் குடில்களுக்கு அங்கு அதிக தேவை இருப்பதை அறிந்தேன். பின்னர், ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர் சென்று அங்கேயே குடில்களை தயார் செய்து விற்பனை செய்துவந்தேன். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக கேரளா செல்வதில்லை. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, வெவ்வேறு அளவுகளில் இங்கு குடில்களை தயாரித்து வருகிறோம். குறைந்தது ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.650 வரை குடில்கள் விற்பனைக்கு உள்ளன” என்றார் சக்திவேல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT