பள்ளி வாகனங்களின் தகுதியை ஆட்சியர் வருடாந்திர ஆய்வு :
தருமபுரி மாவட்ட பள்ளி வாகனங்களில் நேற்று மாவட்ட ஆட்சியர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு பகுதி அலுவலகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. தருமபுரி சுற்றுலா மாளிகை பின்புறம் உள்ள மைதானத்தில் நடந்த ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார்.
பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி, வாகனத்தின் தரைத்தளம், ஹேண்ட் பிரேக் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என அவர் பரிசோதித்தார். மேலும், பள்ளி வாகனங்கள் அனைத்திலும் அரசு விதிமுறைகளின்படி அனைத்து வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் முழுமையாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தாமல் பொதுச் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் பொதுவான ஓரிடத்தில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து கூட்டு ஆய்வு செய்வர்.அந்த வகையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 210 வாகனங்கள் ஆய்வில் பங்கேற்றன. அவற்றில், 9 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வாகனங்களில் ஹேண்ட் பிரேக் பயன்படுத்தும் விதம் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் முறை ஆகியவை குறித்து தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் செயல் விளக்கம் அளித்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, தருமபுரி டிஎஸ்பி வினோத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
