Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் - அனைத்து துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு : மாநிலங்களவையில் செல்வகணபதி எம்பி வலியுறுத்தல்

புதுச்சேரி

மாநிலங்களவையில் நேற்று செல்வகணபதி எம்பி பேசியது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் கடந்த 1985 முதல் செயல்படுகிறது. அதற்கு மாநிலங்களவை தலைவர்தான் வேந்தராகவும் உள்ளார். மாநிலத்தின் இயற்கை வளங் களை பயன்படுத்தும் ஒரு பல்கலைக்கழகம், அந்த மாநிலத்தின் மாணவர்களுடைய நலனுக்கு பயன்படாமல் இருப்பது வேதனைக்குரியது. இதன்மூலம் மண்ணின் மைந்தர்களுடைய உரிமை பறிக்கப்படுகிறது.

குறிப்பாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்திருக்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 78 பாடப்பிரிவுகளில் முந்தைய துணைவேந்தர்கள் 21 பிரிவுகளில் மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடங்களை ஏற்கெனவே ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். மீதமுள்ள 57 பிரிவுகளுக்கும், இனி புதிதாகப் புகுத்தப்படும் பிரிவுகளுக்கும் இது விரிவாக்கப்பட வேண்டும். ஒரு சில பாடப்பிரிவுகளுக்கு தரப்பட்ட இந்தச் சலுகையை, மற்ற பாடப்பிரிவுகளுக்கு விரிவாக்க மறுப்பது புரியாத புதிர் மட்டுமல்ல, இயற்கை நீதிக்கு முரணானதும் ஆகும்.

புதுச்சேரியில் வேறு அரசு பல்கலைக்கழகங்கள் இல்லாததால், மாணவர்கள் உயர்கல்விக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தைத் தான் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. ஆகவே, இந்த கோரிக்கை நியாயமற்றதல்ல.

புதுச்சேரியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் 25 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்காக 1964 முதல் ஒதுக்கி வருகிறது.

மற்றொரு மத்திய அரசு நிறுவனமான தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிய பகுதி மாணவர்களுக்காக 50 விழுக்காடு இடங்களை பகிர்ந்து அளிப்பதையும் கருத்தில் கொண்டு உடனே அனுமதி தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x