Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
சட்டப்பேரவை செயலகத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம், நிதி நிர்வாக விஷயத்தில் சுயாட்சி பெற்றவராக பேரவைத்தலைவர் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாக கருத்தரங்க அறையில் புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் வலியுறுத்தினார்.
தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 33 பேரில் பேரவைத்தலைவர் உட்பட 16 பேர் புதுமுகங்கள். எம்எல்ஏக்களுக்கு சட்டமன்ற செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத் தலைவர் ஓம்பிர்லாவிடம், பேரவைத்தலைவர் செல்வம் கேட்டுக்கொண்டார். அதன்படி நேற்று முதல் 3 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் மூத்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட 24 பேர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரியிலிருந்து பேரவைத்தலைவர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார், புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள், அதிகாரிகள் சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் எம்எல்ஏக்களுக்கு பயிற்சி தொடங்கியது. நாடாளுமன்றத் தலைவர் ஓம்பிர்லா பயிற்சியை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதையடுத்து பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், “சமீபத்திய ஆண்டுகளில், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏற்படும்இடையூறுகள் மிகவும் கவலைக்குரியவை. புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம், எந்தவொரு நிர்வாகத் திட்டத் திற்கும் அனுமதி அல்லது ஒப்புதலுக்காக ரகசிய மற்றும் அமைச்சரவை துறையை சார்ந்திருப்பதை நான் கவனித்தேன். தற்போதைய நிதி அதிகாரப்பகிர்வு திட்டத்தின்படி, சட்டப்பேரவை செயலகத்திற்கு போதுமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டாலும், ஒவ்வொருமுறையும் செலவின அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிதித்துறைக்கு அனுப்பப்படுகின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்தில் 136 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 93 பணியிடங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளால் அயல்பணியாக நிரப்பப்படுகின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அரசு நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரமும், பொறுப்பும் இருப்பதால் புதுச்சேரி பேரவைத் தலைவர், சட்டப்பேரவை செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நியமனம், ஒழுங்கு அம்சங்கள் உள்ளிட்ட நிதி மற்றும் நிர்வாக விஷயங்களில் சுயாட்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் நிதி உதவியை பெற்று, பிரதமர் மோடியால் புதிய சட்டமன்றம் விரைவில் திறக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
காலையில் பயிற்சி முடிந்தவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நுாலகத்தை எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து பிற்பகல் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை (டிச. 16) வரை நடைபெறும் பயிற்சியை முடித்துவிட்டு புதுவைக்கு திரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!