Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM
மூத்த பத்திரிகையாளர் என்.கல்யா ணசுந்தரம்(86) அமெரிக்காவில் நேற்று முன்தினம் காலமானார்.
1935 ஏப்.16-ம் தேதி மதுரையில் பிறந்த கல்யாணசுந்தரம், 1961-ல் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் பணியில் இணைந்தார். இவர், வேலூர், சேலம், சென்னை ஆகிய இடங்களில் செய்தியாளராகப் பணியாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
காங்கிரஸ் கட்சி, காவிரி பிரச்சினை, உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான செய்திகளை விரிவாகப் பதிவு செய்தவர். குடும்ப திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றவர், மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள், மகன் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்த பத்திரிகையாளர் என்.கல்யாணசுந்தரம் மறைவு செய்தி யறிந்து வருத்தம் அடைந்தேன். அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் ‘இந்து கல்யாணம்' என்று அழைக்கப்பட்ட அவர், கருணாநிதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
கல்யாணசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோரும் கல்யாணசுந்தரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT