

வேலூர் சத்துவாச்சாரியில் உடைந்த சிறு பாலத்தை புதிதாக கட்டித்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் உள்ள மந்தைவெளி பகுதி மற்றும் காந்திநகர் இடையில் கால்வாய் மீது கட்டப்பட்ட சிறுபாலத்தை பொதுமக்கள் பிரதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்த சிறுபாலத்தின் மீது சில வாரங்களுக்கு முன்பு டிப்பர் லாரி ஒன்று சென்றபோது திடீரென உடைந்து சேதமடைந்தது. இதனால், சிறுபாலம் அமைந்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
எனவே, உடைந்த சிறு பாலத்துக்கு பதிலாக புதிதாக சிறு பாலம் ஒன்றை கட்டவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் சிறுபாலம் கட்டித் தரக்கோரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக திட்டமிட்டிருந்தனர்.
இந்த தகவலறிந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் அந்தப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மறியலுக்காக திரண் டிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத தால் மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறுபாலம் கட்ட நடவடிக்கைஎடுத்திருப்பதாக தெரிவித்த தகவலின்பேரில் மறியலை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.