

குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் அதிகப்படியான மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் ஏற்கெனவே மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கவுன்டன்யா ஆற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து உள்ளது. மேலும், கடந்த மாதத்தில் கவுன்டன்யா ஆற்றில் அதிகபட்ச அளவாக 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது.
இதன் காரணமாக குடியாத்தம் நகரில் கெங்கையம்மன் கோயில் அருகேயுள்ள கவுன்டன்யா ஆற்றில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகனங்கள் அனைத்தும் காமராஜர் பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டு நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, ஆற்றில் வெள்ள நீர் குறைந்த நிலையில் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையடுத்து, தரைப்பாலத்தில் மண் கொட்டி சீரமைக்கும் பணியை பொதுப்பணி துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப்பணியை எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, தரைப்பாலம் பகுதியை விரைவாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏக்கள் உத்தரவிட்டனர்.