Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

7.56 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குரூ.2,750 கோடியில் நலத்திட்ட உதவிகள் : திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

சென்னை

திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழகம் முழுவதும் 7.22 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவற்றில் 1 கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நகர்ப்புறத்தில் 36 லட்சம் பேரும், கிராமப்புறத்தில் 70 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கரோனா சிறப்புக்கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் சட்டப்பேரவையில், வெளியிடப்பட்டன.

தற்போது இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்போது, இதே நேரத்தில் இதர மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x