

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணையில் 2 மி.மீ., கன்னடியன் கால்வாயில் 1.60 மி.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டத் தில் தென்காசியில் 2 மி.மீ., சங்கரன்கோவில், சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 11 அணைகளும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நிரம்பின. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணை நீர்மட்டம் 138.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 951 கனஅடி நீர் வந்தது. 805 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 149.60 அடியாக இருந்தது.
இதேபோல், 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் வந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 49.20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 82.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 81 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.54 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 132 அடியாகவும் இருந்தது.