தூத்துக்குடி அருகே கடலில் பலத்த காற்றால் குடியிருப்பு பகுதிக்கு - அடித்து வரப்பட்ட மிதவை கப்பல் :

தூத்துக்குடி அருகே கடலில் பலத்த காற்றால் குடியிருப்பு பகுதிக்கு  -  அடித்து வரப்பட்ட மிதவை கப்பல் :
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மிதவை கப்பல் பலத்த காற்றால் மீனவ குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு , இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்கு களை கொண்டு செல்வதற்காக ‘பார்ஜ்' எனப்படும் சிறிய வகை மிதவை கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த மிதவை கப்பல்கள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச்செல்லும். பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத நேரங்களில் இவை பழைய துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும்.

‘முத்தா எமரால்டு' என்ற மிதவை கப்பல் பழைய துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் நேற்று காலையில் வீசிய பலத்த காற்றால் மிதவைக் கப்பல் அங்கிருந்து அடித்துவரப்பட்டு அருகேயுள்ள இனிகோநகர் கடற்கரை பகுதியில் மோதி நின்றுள்ளது.

மிதவைக் கப்பல் தங்கள் பகுதிக்கு வருவதை கண்ட மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் மீது அது மோதாமல் இருப்பதறாக, கடற்கரை பகுதியில் நிறுத்தியிருந்த தங்களது பைபர் படகுகளை பாதுகாப்பாக வெளியே இழுத்து வந்து நிறுத்தினர். இதனால் பைபர் படகுகள் சேதத்தில் இருந்து தப்பின.

கடற்கரை பகுதிக்கு அடித்து வரப்பட்ட மிதவை கப்பலை அப்பகுதி சிறுவர், சிறுமிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இச்சம்பவம் இனிகோ நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிதவைக் கப்பலை மீட்டு பழைய துறைமுகத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் கப்பல் சார்ந்த முகவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in