Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM

15 அடி ஆழ காங்கிரீட் சுவரால் நிலத்தடி நீர் பாதிப்பு - வைகை ஆற்றங்கரையில் பூங்காக்கள் அமைக்க எதிர்ப்பு :

பராமரிப்பில்லாமல் உள்ள நகர் பூங்காக்களை சீரமைக்காமல், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றங்கரையை அழித்து கரையோரத்தில் 3 இடங்களில் பூங்காக்கள் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் மாநகராட்சியும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் 50 அடி அகலத்தில் நான்குவழிச் சாலை அமைக்கின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குலமங்கலம் சாலை சந்திப்பில் எல்ஐசி அருகே ஒரு பூங்கா, ஓபுளா படித்துறை அருகே மற்றொரு பூங்கா அமைக்கப்படுகின்றன. அதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதேபோல் கோச்சடையில் மற்றொரு திட்டத்தில் பூங்கா அமைக்கும் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

செல்லூர் எல்ஐசி பாலம் அருகே சங்கப் பூங்கா அமைப்பதாகக் கூறியுள்ளனர். ஒரு நதியின் வழித்தடம் மரங்கள், செடி, கொடிகளோடு இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும். மற்ற நாடுகளில் நதிகளுக்கென தனிச் சட்டமே இருக்கிறது.

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும்போது முன்பு நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது ஆற்றின் கரையில் மரக்கன்றுகளை நட முடியாத அளவுக்கு காங்கிரீட் சுவர்களையும், தார்ச் சாலைகளையும் அமைத்துள்ளனர். இதனால் ஆற்றின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்காக தார்க் கழிவுகளை ஆற்றின் கரையில் கொட்டியுள்ளனர். அதுவும் ஆற்றின் நீரோட்டத்தை பாதிக்கும்.

ஏற்கெனவே இருக்கிற பூங்காக்களைப் பராமரிக்காமல் ஸ்மார்ட் சிட்டி பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் பூங்காக்கள் அமைக்கின்றனர். இந்த பூங்காக்களையும் கட்டிய பிறகு பராமரிக்க மாட்டார்கள் என்றார்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆற்றின் கரையோரம் சாலைகளை அமைக்கும் பணியை முடிக்கப் போகிறோம். பூங்காக்களால் ஆற்றின் கரைகள் பாதிக்கப்படாது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x