விருதுநகர் அருகே - நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 7 பேர் கைது :

கருப்பசாமி
கருப்பசாமி
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சியைச் சேர்ந்த சிலரை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலையப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து தனிப்படை போலீஸார் அக்கிராமத்தில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.

அப்போது கண்மாய் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது தெரியவந்தது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த கருப்பசாமி(25), வீரமல்லன்(31), மாதவன்(39), மணிமாறன்(36), விஜய்(23), குருசாமி(30), சின்னராசு(31) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளும், அதை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சியைச் சேர்ந்த சிலரை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதும், விருதுநகர் மட்டுமின்றி மதுரையில் உள்ள சிலருக்கும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்ததாகவும் தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரைப் பிடித்து விசாரிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in