Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM

சேலத்துக்கு ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சேலம் மாவட்டத்துக்கு ரூ.1,242 கோடியில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மறைந்த முதல்வர் கருணாநிதி கடந்த 1949-50-ம் ஆண்டுகளில் சேலம் கோட்டையில் வசித்தார். அதன்படி எனது சொந்த வீட்டுக்கு நான் வந்துள்ளேன். ஏற்கெனவே, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது சேலத்துக்கு வந்துள்ளேன். ஆனால், முதல்வராக நான் வந்தபோது, அவர் இல்லை என்ற வருத்தம், ஏக்கம் உள்ளது. திமுக ஆட்சியில் தான் சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அதைவிட அதிக திட்டங்களை சேலத்துக்கு வழங்கி சாதனை செய்து காட்ட தயாராகவுள்ளோம்.

சேலம் மாவட்டத்துக்கு அமைச்சர் நேரு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு, ஒரு மாதத்தில் மக்களை சந்தித்து, 35,217 மனுக்களை பெற்று, அதில் உடனடியாக 10,637 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் அதிகாரிகளின் ஆய்வில் உள்ளது.

தனிமனிதனின் வாழ்க்கை மேம்பாடுதான் ஒரு மாவட்டத்தினுடைய வளர்ச்சி; இந்த சமூகத்தினுடைய வளர்ச்சி. அந்த வகையில் ஒவ்வொரு தனிமனிதனின் கவலையையும் தீர்ப்பதை நாங்கள் கடமையாக கொண்டுள்ளோம். அதேபோல, ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். இவ்விழா மூலம் ரூ.1,242 கோடி மதிப்பிலான திட்டங்களை சேலம் மாவட்டத்துக்கு அறிவிக்கிறேன்.

சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் ரூ.530 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் ரூ.158 கோடியில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.120 கோடியில் ரயில்வே மேம்பாலம். சேலம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்காக ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம். சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ரூ.25 கோடியில் கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்க வசதியாக பன்மாடி உற்பத்தி மையம். கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா இவற்றை முதல்கட்டமாக அறிவிக்கிறேன். இது தொடக்கம்தான். இன்னும் பல திட்டங்கள் படிப்படியாக வர இருக்கின்றன.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x