

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். பின்னர், வள்ளியம்மை தெருவில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு, தேங்கிய மழைநீரை விரைவாக அகற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொடர்பான பிரச்சனையை சீர்செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையினை துரிதமாக களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.