சென்னை டும்மிங்குப்பத்தில் வசித்த - 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கத்தில் வீடுகள் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்

சென்னை டும்மிங்குப்பத்தில் வசித்த -  216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கத்தில் வீடுகள் :  அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்
Updated on
1 min read

சென்னை டும்மிங்குப்பத்தில் வசித்த 216 குடும்பங்களுக்கு, பட்டினப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், புதிய வீடுகளுக்கான ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில் பட்டினப்பாக்கத்தில், 400 சதுர அடி தரைதளத்துடன் 4 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 11 தொகுப்புகளாக மொத்தம் 1,188 வீடுகள், ரூ.152 கோடி மதிப்பில் கட்டப்படுகின்றன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அடுத்த டும்மிங்குப்பத்தில், வாரியத்தின் சார்பில் கடந்த 1983-ல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. இதையடுத்து, அவற்றில் வசித்த 216 குடும்பங்களுக்கு, பட்டினப்பாக்கம் திட்டப் பகுதியில் ரூ.27.62 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மாற்று குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

இந்தக் குடியிருப்புகளில், அடிப்படைத் தேவைகளான சாலை , குடிநீர், கழிவுநீர் வசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்தராவ், மேற்பார்வைப் பொறியாளர் அ.செல்வமணி, மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in