

தட்டச்சு பயிலகங்களை நடத்துவதற்கான டிடிசி தேர்வு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு பயிலகங்கள் நடத்தவும், அவற்றில் ஆசிரியராகப் பணியாற்றவும் தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் தேர்வில் (டிடிசி) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. எஸ்எஸ்எல்சி படிப்புடன், தட்டச்சு (தமிழ் அல்லது ஆங்கிலம்) முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டிடிசி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஏதேனும் ஒரு மையத்தில் ஒன்றரை மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பிறகு தேர்வு நடத்தப்படுகிறது.
டிடிசி தேர்வுக்கான பாடத் திட்டம் 2015-ல் திருத்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பாடத் திட்டம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டம், தேர்வு முறை, வினாத்தாள் குறித்த விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு டிடிசி தேர்வு, புதிய பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.