ஆஞ்சநேயர் கோயிலை அகற்றியதை கண்டித்து மறியல் : காளையார்கோவிலில் பாஜகவினர் 9 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவி லில் ஆஞ்சநேயர் கோயில் அகற்றத்தை எதிர்த்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் சொர்ணகாளீஸ் வரர் கோயில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் சிலர் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வந்தனர்.
கோயில் கட்டும் இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது எனக் கூறி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறி யாளர் சையது இப்ராஹிம், உதவிப் பொறியாளர் அக்பர்அலி, டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் ஆஞ்சநேயர் சிலையை அகற்றி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதை எதிர்த்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர். கோயிலை அகற்றியதை கண்டித்து மாலையில் பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் அக்கட்சியினர் காளையார்கோவில் பேருந்து நிலையம் முன் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
