தாயைக் கொன்ற மகனின் தூக்குத் தண்டனை ரத்து : ஆயுள் தண்டனை விதிப்பு

தாயைக் கொன்ற மகனின் தூக்குத் தண்டனை ரத்து  :  ஆயுள் தண்டனை விதிப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி(45). இவர், 2006-ல் போதையில் வந்து தகராறு செய்த கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், கணவ ருக்கு சொந்தமான வீட்டில் திலகராணி வசித்து வந்தார்.

இந்நிலையில், 18.3.2018 அன்று மறவன்பட்டி பிரதான சாலையில் பேருந்துக்காக காத்திருந்த திலகராணியை அவரது மூத்த மகன் ஆனந்த்(26) சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் தலையை துண்டித்துக் கொலை செய்தார். பின்னர், கறம்பக்குடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் ஆனந்த்துக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 1.10.2021-ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை நிறைவேற்ற அனுமதி கோரி மலையூர் காவல் ஆய்வாளரும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆனந்த்தும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. ஆனந்த் தரப்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மனுதாரர் கொலை செய்ததுடன் தப்பிக்க நினைக்காமல் விஏஓ முன்பு சரண் அடைந்துள்ளார். ஆனந்த்தின் வயது, சமூக பின்னணி மற்றும் குடும்ப பொறுப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படு கிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in