முதியவரிடம் உறவினர்போல நாடகமாடி நகை, பணம், வாகனத்தை திருடிய 3 பேர் கைது :

முதியவரிடம் உறவினர்போல நாடகமாடி  நகை, பணம், வாகனத்தை திருடிய 3 பேர் கைது :
Updated on
1 min read

வாழப்பாடி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரின் வீட்டில் உறவினர்கள் என கூறி நலம் விசாரிப்பது போல் ரூ.65 ஆயிரம், இரண்டரை பவுன் நகை மற்றும் சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற மூவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (76). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் தங்களை உறவினர்கள் என்று கூறி நலம் விசாரித்துள்ளனர்.

இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணுமாக வந்தவர்கள் பெரியசாமியிடம் பேச்சு கொடுத்தபடி, வீட்டில் இருந்த ரூ.65 ஆயிரம் பணம், இரண்டரை பவுன் நகையை திருடி கொண்டு, வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த சிறிய சரக்கு வாகனத்தை எடுத்துச் சென்றனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், சேலம் பெரிய கொல்லப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த சரவணன் மனைவி மைதிலி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியதல்லபாடியைச் சேர்ந்த பாரதிராஜா, சேலம் கோரிமேடு அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் நலம் விசாரிப்பதுபோல் பேசியபடி திருட்டில் ஈடுபட்டதுதெரியவந்தது. இதையடுத்து மைதிலி உள்ளிட்ட மூவரையும் போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in