

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் உலோக குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள பென்டிங்க் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் தேதி நடந்தது. இதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, கரோனா தொற்றின் அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள், முறையாக முகக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்தும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடு, அவற்றுக்கான மாற்று பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு, துரு பிடிக்காத உலோக குடிநீர் பாட்டில்களை இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் அதன் தலைமை பொது மேலாளர் சைலேஸ் திவாரி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் ஆகியோர் வழங்கினர்.