

தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படித்த மாணவர்களின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று (டிச.10) முதல் டிச.15-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பாடத்தொகுதி உட்பட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
அதில் திருத்தம் இருப்பின் அதற்குரிய விவரங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே பெயர் மற்றும் பிறந்ததேதி திருத்தம் செய்யப்படும். மாணவர், பெற்றோர். பெயர் தவறாக இருந்தால் அதை முழுமையாக நீக்கி சரிசெய்ய வேண்டும்.
பிளஸ் 1 படித்து தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயரை, பிளஸ் 2 தேர்வுப்பட்டியலில் இருந்து எக்காரணத்தை கொண்டும் நீக்கக்கூடாது. நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் மாணவர்களையும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.