

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மேலும் 20 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கு, வழித்தடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் தற்போது 2 தடங்களில் மொத்தம் 54 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக இணைப்பு வாகன சேவையை முழு அளவில் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் விமான நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 சிறிய பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இது மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் தொடங்கியுள்ள சிறிய பேருந்துகளின் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கிடையே, மேலும் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, தேவையை கருத்தில் கொண்டு சுமார் 20 சிறிய பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றனர்.