Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM

தொழில் முதலீட்டு கழகம் சார்பில் - நெல்லையில் ரூ.5.94 கோடி கடனுதவி :

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் மேளாவில் 8 பயனாளிகளுக்கு ரூ. 5.94 கோடி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில், சிறப்பு தொழில் கடன் மேளா நடத்தப்பட்டது. அதில், 7 பயனாளிகளுக்கு ரூ. 5.72 கோடி மதிப்பில் கடன் அனுமதி ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ. 22.49 லட்சம் மருத்துவமனை நிறுவ முதற்கட்ட கடன் நிதியுதவியையும் ஆட்சியர் வழங்கினார். மேலும் ரூ.6 கோடி கடனுக்கான விண்ணப் பங்களையும் பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்து வதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இச் சிறப்பு தொழில் கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம், பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், 6 சதவீதம் வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டு, தகுதி பெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத் தில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங் களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் பெறலாம். இவ்வாறு ஆட்சியர் பேசினார். மத்திய, திட்ட அலுவலர் (சிப்காட்) நசிர்அகமது, சிட்கோ வளர்ச்சி அலுவலர் கலாவதி, முன்னோடி வங்கி மேலாளர் கிரேஷி, மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளர் நாகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x