சேலத்தில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் படைவீரர் நலன்துறை உதவி இயக்குநர் மேஜர் பிரபாகர்.
சேலத்தில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் படைவீரர் நலன்துறை உதவி இயக்குநர் மேஜர் பிரபாகர்.

கொடிநாள் நிதி ரூ.2.03 கோடி வசூலிக்க இலக்கு : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

Published on

நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக இந்தாண்டு ரூ.2.03 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

படை வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கப்படும்.

முன்னாள் ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்காக திரட்டப்படும் கொடி நாள் வசூலில் 2020-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அந்த இலக்கைத் தாண்டி ரூ. 2 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

இந்தாண்டு, ரூ. 2 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை தாண்டி அதிக நிதி திரட்டி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக 2018-ம் ஆண்டுக்கான கொடிநாள் நிதிக்கு அதிக நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், போர் மற்றும் போர் நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் மனைவி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன், கோட்டாட்சியர்கள் த.மஞ்சுளா, தே.இளவரசி, நாமக்கல் மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் ரூ.1 .75 கோடி வசூல்

கொடிநாள் நிதி வசூலில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சேலம் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1,57,96,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கை விட அதிகமாக 11 சதவீதம் கூடுதலாக மொத்தம் ரூ.1,75,36,044 வசூல் செய்து சாதனை நிகழ்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர்.பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in