

மின்தடை தொடர்பான புகார்களை பெறும் `மின்னகம்' தளத்தின் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மின்தடை தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் 2003-ம் ஆண்டில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் புகார் மையம் செயல்பட்டு வந்தது. அதேபோல, மின்சாரத் துறை அமைச்சர் முகாம் அலுவலகத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக , ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்கு முரணாக ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த மின் தடை புகார் மையங்களை ரத்து செய்துள்ளது. மேலும், புகார்களை ஒருங்கிணைந்து பெறும் வகையில் மின்னகம் என்ற ஒரு தனித் தளத்தை அமைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், மின்னகப் பணியின் ஒப்பந்ததாரர் விவரம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
முன்னதாக மின்தடை புகார் மையங்கள் மூலம், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 12,000 புகார்கள் சரி செய்யப்பட்டன. ஆனால், அதனை தற்போதைய அரசு மறைத்து, ஒரு நாளுக்கு 8,000 புகார்கள் சரிசெய்யப்படுவதாக சுய விளம்பரம் செய்து வருகிறது. 2003-ம் ஆண்டில் இருந்து நடைமுறையிலிருந்த 1912 என்ற புகார் எண்ணை `மின்னகம்' என்ற போர்வையில் 94987 94987 என மாற்றுவதற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே, முதல்வர் இதில் தலையீட்டு `மின்னகம்' ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.