

புதுச்சேரியில் காலிமனை வரி செலுத்தாவிடில் மனை மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நக ராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்கு உட் பட்ட பல்வேறு பகுதிகளில் காலிமனைகள் உள்ளன. இந்த மனைகளில் கட்டுமானம் தொடங்கப்படும் காலம் வரை உரிமையாளர்கள் மனை தொடர்பான ஆவணங்களை புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, புதுச்சேரி நகராட்சிக்கு மனையின் மதிப்பு தொகையில் 0.1 சதவீதம் காலிமனை வரியாக செலுத்திட வேண்டும்.
இவ்வரியை செலுத்துவது சட்டப்படி காலிமனை உரிமையா ளர்களின் கட்டாயக் கடமையாகும். அத்துடன் காலிமனைகளை உரிமையாளர்கள் முறையாக பராமரிப்பு செய்திடல் வேண்டும். அப்படி செய்யாதது, புதுச்சேரி நகராட்சிகள் சட்டப்படி தண்ட னைக்குரிய குற்றமாகும். காலி மனை வரி செலுத்தாத, பராமரிப்பு செய்யாத காலிமனைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மனைகளின் அரசு மதிப்பினை மதிப்பிழப்புசெய்வது அதாவது அவற்றின் மதிப்பினை பூஜ்யமாக்குவது என்ற பரிந்துரையை புதுச்சேரி அரசின் வருவாய்த் துறைக்கு சமர்ப்பித்து, நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
அப்படி நடைபெற்றால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலிமனை வரி உள்பட அனைத்து வரிகளும் வட்டி மற்றும் அபராதத் தொகையுடன் வசூலித்த பிறகே மீண்டும் மதிப்பு வழங்க வழிவகை செய்யப்படும். எனவே, காலிமனை உரிமையாளர்கள் உடனடியாக புதுச்சேரி நகராட்சியை அணுகி, காலிமனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து வரியை செலுத்திட வேண்டும். தொடர்ந்து, காலி மனைகளை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.