Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி - விருதம்பட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு : நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் விருதம்பட்டு  ராஜீவ்காந்தி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் அங் குள்ள சாலைகள் மழையால் சேறும், சகதியுமாக உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 29-ம் தேதி படத்துடன் செய்தி வெளி யானது. இதைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்ட அதிகாரி அரவிந்தன், உதவி மேலாளர் நல்லால வெங்கட் ராவ், சந்திரசேகர், மோகன் ராஜா மற்றும் பகுதி கண்காணிப்பாளர் விஷ்ணுகுமார் ஆகியோர் கனமழையால் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்தனர்.

பின்னர், 250 மீட்டர் நீளமுள்ள சாலை, மொரம்பு மண்ணை கொட்டி சமன்படுத்தப்பட்டது. இதையடுத்து, மழையால் சேறும், சகதியுமாக உள்ள சாலை சீரானது. இதைக்கண்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட இந்து தமிழ் திசை நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து விருதம்பட்டு  ராஜீவ்காந்தி நகர் பொதுமக்கள் கூறும்போது, “பாதாள சாக்கடைதிட்ட பணிக்காக தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. பள்ளம் தோண்டிய இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் சாலை முழுவதும் பரவி கிடந்தது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் பள்ளிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும், வாகனத்தில் செல்வோரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர்.

தற்போது சாலையில் தேங்கி யிருந்த சேற்றை அகற்றி மொரம்பு மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இதனால் எங்களுக்கு நிம்மதியானது. இருப்பினும் சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளதால், அடுத்த மழை வருவதற்குள் எங்களது சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது. அப்போது தான் நிரந்தர தீர்வு ஏற்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x