Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

தமிழில் படிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் : பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், மாணவி ஒருவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டம் வழங்கினார். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், இந்திய அறிவியல் நிறுவன இயக்குநர் கோவிந்தன் ரங்கராஜன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

தமிழில் படிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 20-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்றார். விழாவில், முதுமுனைவர் பட்டம் 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 பேருக்கும், பெரியார் பல்கலைக் கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்கள் உள்ளிட்ட 771 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன், பட்டச் சான்றிதழை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கி பேசியதாவது:

பெரியார் பெயரில் அமைந்துள்ள இப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் பெண்கள் 511 பேர், ஆண்கள் 266 பேர். இதுதான் சம உரிமைக்காக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் செய்த சாதனை. எந்தமொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதில் வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால், தமிழில் படிக்கும் எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு சமுதாய உணர்வு, சமூக சிந்தனை வர வேண்டும் என்பதற்காக பாடப்புத்தகங்களில் அவற்றை கொண்டு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், இந்திய அறிவியல் நிறுவனம் (பெங்களூரு) இயக்குநர் கோவிந்தன் ரங்கராஜன் உட்பட பலர் பேசினர். கடந்த 2019-2020 மற்றும் 2020-2021-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 1,30,312 மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 2,244 மாணவர்கள், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 20,659 மாணவர்கள் என மொத்தம் 1,53,215 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x