குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது :  ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

குடிசை மாற்று வாரிய மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு மக்களின் வாழ்விட உரிமையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 6 மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி எழும்பூர் கே.பி.பார்க் குடிசை மாற்றுவாரியத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முதல்வர் கருணாநிதி 1972-ம் ஆண்டு அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் மேயர் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின் அடிப்படையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திட்டத்தை நாட்டிலேயே முன்னோடியாக உருவாக்கினார். ஆனால், இன்று அந்த குடியிருப்புவாசிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் வாழும் மக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பை இடித்து கட்டும்போது அதில் குடியிருக்கும் மக்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பணம் கேட்பதை ஏற்க முடியாது.

விவசாய கடன், நகைக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுபோல், குடிசைப்பகுதி மக்களிடம் ரூ.1.5 லட்சம் கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதி செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in