Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், அரியர் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் தோல்வியடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மருதமலை சாலையில் அமைந்துள்ள, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் 12 பட்டப்படிப்புகள் உள்ளன. தவிர, பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2018-19-ம் கல்வியாண்டு மற்றும் 2019-20-ம் கல்வியாண்டில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் படித்த மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் முறையில் அரியர் எழுத்துத் தேர்வும், செப்டம்பர் மாதம் நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள் கடந்த 2-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டது.
இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தனர். இதையடுத்து, தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கும் மாணவர்கள் தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவு கட்டிடத்தின் முன்பு அமர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அரியர் தேர்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். வேண்டுமென்றே எங்களை பெயில் ஆக்கியுள்ளனர். இது எங்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை வழங்க வேண்டும்,’’ என்றனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘இந்தத் தேர்வு முன்னரே, செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT