Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

தொடர் கனமழை காரணமாக - சென்னையில் 1,010 சாலைகள் பழுது : ரூ.147 கோடியில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் 1,010 சாலைகள் பழுதாகியுள்ளன. அவற்றை ரூ.147 கோடியில் சீரமைக்க இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அக்.25-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் 6 மணி நேரத்துக்குள்ளாக 20 செமீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளின் மேற்புறங்களில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும் ஏற்பட்டன. ஒரு சில சாலைகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும் 5,270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக 622 உட்புற தார்சாலைகள், 307 உட்புற கான்கிரீட் சாலைகள், 79 பேருந்து சாலைகள் மற்றும் 2 சாலைகளில் நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.109 கோடியே 60 லட்சம், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இருந்து ரூ.37 கோடியே 58 லட்சம் என மொத்தம் ரூ.147 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்மூலம் 1,008 சாலைப் பணிகளும்2 சாலைகளில் நடைபாதை பணிகளும் என மொத்தம் 1,010 சாலைப் பணிகளைமேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட சாலைகள் தவிர்த்து சேதமடைந்த பிற சாலைகளை கணக்கிடும் பணி வட்டார துணை ஆணையர்களின் மேற்பார்வையில் தொடர்புடைய பொறியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த திட்டஅறிக்கை பெறப்பட்டவுடன் அடுத்தகட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து (Milling) புதிய சாலைப்பணிகளை மேற்கொள்ளவும், ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இணையவழி ஒப்பங்களாக (E-Tender) மட்டுமே கோரவும் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு சாலைப் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x