

குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் கரை யோரம் ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பை காவல் துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த மாதம் கனமழை பதிவானது. இதில், தமிழக -ஆந்திர எல்லையில் பெய்த மழையின் காரணமாக கவுன்டன்யா ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 20 ஆயிரம் கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்படும் நபர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதில் சில அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பொதுமக்களும் அடிக்கடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பகுதி, பகுதியாக நடைபெற்று வருகிறது. இதுவரை 24 வீடுகள் மற்றும் 2 கடைகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிவர் புயல் நேரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1,200 வீடுகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் உள்ள பாவோடும் தோப்பு பகுதியில் சுமார் 880 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்தும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வருவாய்த்துறையினர் நேற்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் முற்றுகையிட்டதுடன், ‘தாங்கள் பல ஆண்டுகளாக பாவோடும் தோப்பு பகுதியில் வசித்து வருவதால் மாற்று இடம் வேண்டாம்’ என்றும் ‘ஆற்றின் வெள்ளம் குடியிருப்புகளில் புகாதவாறு கரையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டித்தரவேண் டும்’ என கோரிக்கை வைத்தனர்.
இந்த தகவலை அடுத்து அந்த இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர். கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளித்ததுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்தும் அவர்களின் ஆதார் எண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் ஆதார் நகலை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.