

சேலத்தில் 4 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை கருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு சரக்கு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு அரிசி மூட்டைகளை மாற்றி ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, கருப்பூர் காவல்நிலைய எஸ்எஸ்ஐ சக்திவேல் மற்றும் போலீஸார் அந்த வழியே ரோந்து சென்றனர்.
போலீஸாரைக் கண்டதும் அரிசி மூட்டை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீஸார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 4 டன் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த ராஜூ (30), தேவராஜ் (25), சிவதாபுரத்தைச் சேர்ந்த அருள் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 டன் ரேஷன் அரிசியுடன் 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரான சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.