

திருநெல்வேலி மாநகராட்சி மண்டல உதவி ஆணையர்கள் ஜஹாங்கீர் பாஷா (பாளையங்கோட்டை), லெனின் (மேலப்பாளையம்), அ.பைஜீ (திருநெல்வேலி), எஸ்.ஐயப்பன் (தச்சநல்லூர்) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியில் தேங்கிய தண்ணீர் மின்மோட்டார் மூலம் சிவனடியார் குளத்துக்கு செல்லுமாறு வெளியேற்றப்பட்டது. சாந்திநகர் சீவலப்பேரி சாலையில் ஏற்பட்ட அடைப்பு சீர்செய்யப்பட்டு, வெட்டுவான்குளத்துக்கு செல்லும் நீர்வழிப் பாதை சரி செய்யப்பட்டது. மேலப்பாளையம் மண்டலத்தில் மகிழ்ச்சி நகர், டக்கரம்மாள்புரம் மற்றும் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக சாலை பகுதிகளில் தேங்கி இருந்த மழைநீர் மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.
தச்சநல்லூர் மண்டலத்தில் வண்ணார்பேட்டை, தெற்கு பாலபாக்கியா நகர், பரணி நகர், கைலாசபுரம், மேலக்கரை நியூ காலனி, கிருஷ்ணா நகர், அனு ஆஸ்பத்திரி பின்புறம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.
சாலை சீரமைப்பு
கோடகன் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் அமலைச் செடிகள் காரணமாக மழைநீர் அதிகளவில் தேங்கி டவுன் வழுக்கு ஓடை மற்றும் காட்சி மண்டப பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியேற்றப்பட்டது.
டவுன் சந்திபிள்ளையார் கோவில் முதல் காட்சிமண்டபம் வரையுள்ள சாலை வாய்க்காலில் தண்ணீர் பெருகியதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. மோட்டார் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு ள்ளது.