

திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை:
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாத முடிவில் துறை அமைச்சர், ‘‘வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கெனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இச்சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.
அமைச்சரின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 2014 முதல் 2016 வரை பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை, 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்படுகிறது.
அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பிக்கலாம். 3 மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 2014-ம் ஆண்டு ஜன.1-ம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.