Published : 03 Dec 2021 03:09 AM
Last Updated : 03 Dec 2021 03:09 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை வழங்க வேண்டும் : வருவாய் துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை உடனடியாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண் டும் என வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

நீர்நிலை புறம்போக்கு இடங் களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கீடுசெய்து அதன் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீர்நிலைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அனுப்பிவைக்குமாறு தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகள், நகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை வருவாய்த் துறையினர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

நீர்நிலைகள் அருகாமையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், கடைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றின் ஆவணங்களை பெற்று அவற்றை சரிபார்த்து, ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளதா? அரசு புறம்போக்கு இடத்தில் கட்டிடங்கள், வீடுகள், வணிக வளாகம், கடைகள் ஏதேனும் கட்டப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அதன் விவரங் களை சேகரித்து, அரசுக்கு அனுப்ப ஏதுவாக அறிக்கையாக வழங்க அனைத்து வருவாய்த் துறையினர், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் செயல்பட வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பணிகளை உடனடியாக தொடங்கி நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை நாளைக்குள் (இன்று) ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை சரியாக செய்யாத அரசு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், ஊராட்சி உதவி இயக்குநர் விஜய குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x