

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் சாலையில் விடப்படுவதால், கஸ்தூரி எஸ்டேட் பகுதியில் வீடுகளையும், சாலைகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிஉள்ளனர்.
சென்னையில் கடந்த 3 வாரங்களாக பெய்த கனமழையால் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் தேங்கியது. தனியார் இடங்களிலும் அதிக அளவில் வெள்ளநீர் தேங்கியது. வெளியிடங்களிலும் வெள்ளநீர் தேங்கி இருப்பதால், தனியார் தங்கள் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றாமல் இருந்தனர். கடந்த 3 நாட்களாக மழை பெய்யாத நிலையில், மாநகராட்சி சார்பில் 900-க்கும் மேற்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி பொது இடங்களில் தேங்கிய வெள்ளநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வடிந்துவிட்டது. சில இடங்களில் மட்டும் வெள்ளநீர் வடியவில்லை.
சாலைகளில் வெள்ளநீர் வடிந்துவிட்ட நிலையில், தனியார் இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தனியார் தங்கள் இடத்தில் தேங்கிய வெள்ளநீரை மழைநீர் வடிகால் மூலமாக வெளியேற்றாமல், சாலைகளில் விட்டு வருகின்றனர். இதனால் சாலைகள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தற்போது வெள்ளநீர் சூழ்ந்து வருகிறது.
குறிப்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றி ஆழ்வார்பேட்டை, பின்னி சாலையில் விடுகின்றனர். இது கஸ்தூரி எஸ்டேட் 2-வது தெரு மற்றும் அத்தெருவில் உள்ள குறுக்கு தெருக்களில் வெள்ளமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறனர். சாலையில் உள்ள வெள்ளநீரை மாநகராட்சி சார்பில் எடுத்து விடும் பணி நடந்துவந்தாலும், வெள்ளநீர் வடியவில்லை. அந்த நீரை சாலையில் விடாமல்,மழைநீர் வடிகால்களில் நீர் செல்வது குறைந்த பிறகு விடுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கல்லூரி வளாகத்தில் உள்ள நீரை வெளியேற்ற வேறு வழியில்லை. சாலையில்தான் விட வேண்டும். அதை வேகமாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.