Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

தரைப்பாலத்தைக் கடக்க முயன்றபோது காருடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை 2-வது நாளாக தேடும் பணி :

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த பழங்கூர் கிராமத்தையும், உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியனூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆலூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தொடர் மழையின் காரணமாக மூழ்கி வெள்ளநீர் செல்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிளியூர் கிராமத்தை சேர்ந்த கிளியன்(50), முருகன்(42), சங்கர்(47) ஆகிய மூன்று நபர்கள் காரில் தரைப் பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது வெள்ளநீரின் வேகத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கிளியன் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் காரில் இருந்து வெளியேறி நீச்சல் அடித்து தப்பி விட்டனர். இந்நிலையில், காரை ஓட்டிச்சென்றவரும் அதன் உரிமையாளருமான முருகன் என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸார், நீரில் அடித்து செல்லப்பட்ட முருகனை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் இரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணி தாமதமானது.

இந்த நிலையில் நேற்றுகாலை இரண்டாவது நாளாக ஆற்றின் ஒரு கரையில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மீட்பு குழுவினரும், மற்றொரு கரையில் திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்பு குழுவினரும் என இரண்டு கரைகளிலும் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று 2-வது நாளாக தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x