Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

கனமழையால் தொடரும் பாதிப்பு - புதுவையில் பல்வேறு இடங்களை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது : அரியூர் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பை காலி செய்தனர்

புதுச்சேரியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தொடங்கிய கனமழை விடிய, விடிய பெய்தது. காலை 6.30 மணியளவில் மீண்டும் மழை கொட்ட தொடங்கியது. அதன்பின் குளிர்ந்த காற்றுடன் மழை விட்டுவிட்டு பெய்தது.

கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இந்திராகாந்தி சதுக்கத்தில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியது. இதை சுற்றியுள்ள நகர்களான பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், விக்டோரியா நகர், விவேகானந்தர் நகர், லேம்பார்ட் சரவணன் நகர், சரநாராயண நகர், பாவாணர் நகர் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் கடலூர், விழுப்புரம் சாலை வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதேபோல் சுல்தான்பேட்டை பெட்ரோல் பங்கில் வெள்ளம் புகுந்ததால் மூடப்பட்டது. வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளிலும் ஏராளமான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இங்கு ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. லெனின் வீதியில் உள்ள வாய்க்கால்களில் பொக்லைன் மூலம் அடைப்புகளை அகற்றி சீரமைப்பு பணிகள் நடந்தது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் பணிகள் தொய்வாகவே நடந்தது.

வேல்ராம்பட்டு ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீரால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கடலூர் சாலை முருங்கப்பாக்கத்தில் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்து சென்றன. சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த்துறை யினர் உணவு வழங்கி வருகின்றனர்.

கிராமப் பகுதிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

குடியிருப்பை காலி செய்த ஊழியர்கள்

அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தையொட்டி சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. தரைத் தளத்தை தண்ணீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தோடு கழிவுநீரும் சேர்ந்ததால் குடியிருப்பில் வசிக்க வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சுகாதார குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x