Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

வார்டு மறுவரையறையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக புகார் :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது திருநெல்வேலி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பார்வதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10-வது வார்டில் பார்வதி அம்மன் கோவில் தெரு, திருஞானசம்பந்த நாயனார் தெரு, சேரமான் பெருமாள் நாயனார் தெரு, உத்திர பசுபதிநாயனார் தெரு, கோட்டூர் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறார்கள். வார்டு மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த தெருக்களை 4-வது வார்டில் இணைத்திருக்கிறார்கள். இது குறித்து இப்பகுதி மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படவில்லை. இப்பகுதி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்தபடி இந்த தெருக்களை 10-வது வார்டிலேயே நீடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலைக்கரைப்பட்டி வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனு:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். அதை சுற்றி40 கிராமங்கள் உள்ளன. இங்கிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தினமும் 150 முதல் 200 நோயாளிகள் பயன்பெற்றனர். செவ்வாய்க்கிழமை தோறும்80 பேருக்கு கர்ப்பகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாதத்தில் குறைந்தது 10 முதல் 20 வரை மகப்பேறு நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்ததால் தற்காலிகமாக ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். இப்பகுதி மக்களின் நலன் கருதி 50 படுக்கைகளுடன் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர்நகர் நலச்சங்கத்தினர் அளித்த மனு: சங்கர்நகர் அருகேஇந்தியா சிமென்ட் தொழிற்சாலைக்கு வடக்கில் அமைந்துள்ள குளத்தில் மழையால் தண்ணீர் பெருகியுள்ளது. ஆனால் குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சிலர் மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். இந்த குளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் குளத்தை சுற்றியுள்ள பண்டாரகுளம், தாதனூத்து, அருந்ததியர் காலனி, வடக்கு தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினை வராது. எனவே இந்த குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மதகுகளை சீரமைத்து, தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி,ஓடைகளை விரைந்து சீரமைக்கவேண்டும் என்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பபாண்டியன் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x