Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு : பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றன. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமே ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று விடுமுறை அறிவித்தார். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் ஏமாற்றமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே கல்லூரிகளுக்கு சென்றனர்.

காலையில் பெய்த சாரல் மழை நேரம் செல்ல, செல்ல குறைந்தது. பகல் 11 மணியளவில் மழைப் பொழிவு சுத்தமாக நின்றது. பிறகு 1 மணியளவில் வானம் வெளுத்தது. வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள் ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கிய சாலைகள் ஆள்நடமாட்டமின்றி நேற்று வெறிச்சோடியே காணப் பட்டன.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 972 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் 110 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 வீடுகள் இடிந்தன. வீடு இழந்தவர்கள் மீட்கப்பட்டு, 36 முகாம்களில் சுமார் 3 ஆயிரத்து 184 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உணவு, போர்வை உள்ளிட்டவைகளை வருவாய்த் துறையினர் வழங்கி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருவதால் அனைத்து பகுதிகளும் சேறும், சகதியுமாக உள்ளது. குறிப்பாக, 1-வது மண்ட லத்துக்கு உட்பட்ட காட்பாடியில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கின்றன. காட்பாடி, கழிஞ்சூர் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை யளவு குறைந்து 1 வாரத்துக்கு மேல் ஆகியும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் மழைநீர் தேங்கியுள்ளதால் பலவிதமான துயரங்களை சந்தித்து வருவ தாகவும், இதற்கான விடிவு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 84 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. மேலும் 4 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தொரப்பாடி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி அருகேயுள்ள குடியிருப்புப்பகுதியில் நுழைந் துள்ளது. வெள்ளம் அதிகமாக செல்வதால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 86 மி.மீ, மழையும், வாலாஜாவில் 81.3 மி.மீ மழையளவு பதிவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள கானாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையால் இதுவரை 431 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 57 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 5 முகாம்களில் 167 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாலாஜா அணைக்கட்டு பாலாற்றில் இருந்து 11,506 கன அடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 297 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும், 22 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் மீதமுள்ள ஏரிகளும் நிரம்பும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், காலை 7 மணியளவில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழக்கம்போல் அறிவித்தார்.

அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியதை தொடர்ந்து, காலை 7.45 மணிக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் அறிவித்தார். இருந்தாலும் பள்ளி கொண்டா, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர்.

அதேபோல, காலை 8.15 மணிக்கு மேல் மழை அதிகமாக கொட்டியதை தொடர்ந்து கல்லூரி களுக்கும் விடுமுறை என ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்தார். ஆட்சியரின் இந்த குழப்பமான அறிவிப்பால் மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:

வேலூர் 9.4 மி.மீ., குடியாத்தம் 9.2 மி.மீ., காட்பாடி 15 மி.மீ., மேல் ஆலத்தூர் 8.8,மி.மீ., பொன்னை 53.8 மி.மீ., திருவலம் 42,மி.மீ., வாலாஜா 81.3 மி.மீ., அரக்கோணம் 56 மி.மீ., ஆற்காடு 58.4 மி.மீ., காவேரிப்பாக்கம் 86 மி.மீ., அம்மூர் 6.5மி.மீ., சோளிங்கர் 44.2 மி.மீ., கலவை 50.8 மி.மீ., ஆலங்காயம் 9.20 மி.மீ., ஆம்பூர் 2.80 மி.மீ., வடபுதுப்பட்டு 2 மி.மீ., வாணியம்பாடி 6.மி.மீ., திருப் பத்தூர் 0.4 மி.மீ., என மழையளவு பதிவாகியிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x