

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகளின் நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக, கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, முஸ்லிம் பள்ளிகள் இணைந்து ‘தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன.
சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த கூட்டமைப்பை அறிமுகம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை முறியடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சிறுபான்மை உரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது.
தென்னிந்தியத் திருச்சபையின் டிடிடிஏ பள்ளிகள், சிறுபான்மை கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்காதசிறுபான்மையின மாணவர்களுக்கு மாநில அரசின் சார்பாக நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில். மமக தலைவர் ஜவாஹிருல்லா, எம்.பி. நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், ரூபி மனோகரன், அப்துல் வஹாப், அப்துல் சமது, மதுரை இயேசு சபை மாநிலத் தலைவர் டேனியஸ் பொன்னையா, தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழக செயலாளர் டி.எப்.டான் பாஸ்கோ, இயேசு சபை கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.எம்.ஜான் கென்னடி பங்கேற்றனர்.