என்எல்சியுடன் இணைந்து நெய்வேலியில் புதிய அரசு ஐ.டி.ஐ : 4 தொழிற்படிப்புகளுடன் இந்த ஆண்டே தொடக்கம்

என்எல்சியுடன் இணைந்து நெய்வேலியில் புதிய அரசு ஐ.டி.ஐ :  4 தொழிற்படிப்புகளுடன் இந்த ஆண்டே தொடக்கம்
Updated on
1 min read

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி-யுடன் இணைந்து நெய்வேலியில் புதிய அரசு ஐடிஐ தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 தொழிற்படிப்புகளுடன் இந்த ஆண்டே அது தொடங்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடலூர் மாவட்டம் நெய்வேலி யில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி) இணைந்து புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) அமைக்கப்படும் என்று நிதி மற்றும் பணியாளர் மேலாண் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பின் பேரில் நெய்வேலியில் அரசு ஐடிஐ ஏற்படுத்துவது தொடர்பாக என்எல்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருக்கு அரசு அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து, நெய்வே லியில் 4 தொழிற்பயிற்சி பாடங் களுடன் ஐடிஐ அமைப்பது தொடர்பாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அக்கருத்துருவை ஏற்று நெய்வேலியில் என்எல்சி-யுடன் இணைந்து அரசு ஐடிஐ தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பணியாளர் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்கு நிதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மென்திறன் பயிற்றுநரை நியமிக்கவும், இந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி படிப்புகள் தொடங்கவும் வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in