Published : 28 Nov 2021 03:09 AM
Last Updated : 28 Nov 2021 03:09 AM

ஆம்பூர் அருகே தடுப்பணை உடைந்தது - பாசனத்துக்கு தேக்கி வைத்த நீர் வீணானது : தண்ணீரை தேக்கி வைக்க விவசாயிகள் கோரிக்கை

ஆம்பூர் அருகே தடுப்பணை உடைந்ததால் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பைரப்பள்ளி அடுத்த சாணிக்கணவாய் என்ற கானாறு ஓடுகிறது. தமிழக - ஆந்திர வன எல்லையில் உள்ள பெரியதுருகம் வனப்பகுதியில் இருந்து சாணிக்கணவாய் கானாறு உற்பத்திஆகிறது.

சாணிக்கணவாய் கானாறு, சின்னதுருகம், தேன்கல் கானாறு, தொம்மகுட்டை, சேஷவன் கிணறு, எர்ரகுண்ட, ரெங்கையன் கிணறுகள் வழியாக ஓடி, பைரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள மேர்லமிட்டா ஏரியில் கலக்கிறது.

இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரானது, விவசாயிகளின் நலன் கருதி வேளாண் துறையினர் மற்றும் உலக வங்கி நிதியுதவியின் கீழ் கட்டப்பட்ட கசிவு நீர்க் குட்டைகளில் அந்த தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பிறகு, மேல்மிட்டாளம், காளியம்மன் கோயில் அருகே உள்ள பெரிய தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

அந்தத் தடுப்பணையில் தேங்கும் தண்ணீர் நிரம்பி, வெளியேறும் உபரி நீரானது மேல்மிட்டாளம், மிட்டாளம், பந்தேரப்பள்ளி வழியாக ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி, கன்றாம்பள்ளி ஏரியில் இறுதியாக வந்து நிரம்புகிறது.

இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழையால் இந்த கானாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பந்தேரப்பல்லி மயானத்துக்காக கட்டப்பட்ட தடுப்பு சுவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

வரலாறு காணாத வெள்ளம் வந்ததால், மேர்ல மிட்டா ஏரி, கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்த கானாற்றில் வரும் தண்ணீரால், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி ஏரிக்கு வந்துக்கொண்டிக்கிறது.

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய கன்றாம்பள்ளி ஏரி, அடுத்த சில நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேல்மிட்டாளம் காளியம்மன் கோவில் அருகே உள்ள தடுப்பணை அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் விரிசல் ஏற்பட்டு தடுப்பணை உடைந்தது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர், கைலாசகிரி - கடாம்பூர் - உதயேந்திரம் நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணானது. விவசாயிகளின் நலன்களுக்காக கட்டப்பட்ட தடுப்பணையில் தேங்கிய தண்ணீர் வீணாகி வருவது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.

மேலும், தற்போது வந்து கொண்டிருக்கும் மழை வெள்ள நீரையாவது, தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x